Wednesday 3 May 2017

தண்ணீரும், கண்ணீரும்...!!!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்,

             மிக நீண்ட இடைவெளிக்குப் பின் முகநூலில் நான் உலவியபோது கண்ட சில விஷயங்கள்: அமைச்சர் செல்லூர் ராஜூ-வின் தெர்மாகோல் காமெடி, டப்ஸ்மாஷில் தோன்றிய ஒருவனை பொறாமையால் (கிண்டல் என்கிற பெயரில்) வதைக்கும் மீம் லெஜெண்டுகளின்(!) [அடப்பாவிங்களா, லெஜெண்டுக்கு மீனிங் தெரியுமாடா மொதல்ல...???!!!] படைப்புகள், கன்னடர்களை விமர்சித்த நடிகர் சத்யராஜ், மன்னிப்பு கேட்டால் மட்டுமே கர்நாடகாவில் பாகுபலி இரண்டாம் பாகத்தை வெளியிடுவோம் என்கிற சில கன்னட அரசியல் விஷமிகளின் பூச்சாண்டி, மன்னிப்புதானே, கேட்டுட்டா போச்சு, என்கிற ரீதியில் மன்னிப்பு என்கிற வார்த்தையைக்கூட உச்சரிக்காமல் வருத்தம் மட்டுமே நக்கலாகத் தெரிவித்த நடிகர்  சத்யராஜிற்கு தமிழக மக்களின் வரவேற்பும், ஆதரவும், முதலியன. இத்தனை பிரச்சனைகளில் காவிரி நீருக்காகப் போராடும் விவசாயிகளைப் பற்றியோ, விவசாயிகள் உயிரிழக்கும் அவலங்கள் பற்றியோ பெட்டிச்செய்தி அளவுகூட தகவலேதும் இல்லை.

             வழக்கமாக அஜித்-விஜய் ரசிகர்களின் மோதல்களை மட்டுமே கண்ட முகநூல் களம், அன்று கன்னடத் திரை ரசிகர்கள், தமிழ்த் திரை ரசிகர்களையும், நடிகர்களையும் ஏளனம் செய்து உருவாக்கியிருந்த முகநூல் பக்கங்களைத் தாங்கி நின்றது. 
இதற்கு பதிலடியாக நம்மவர்களும் அவர்களைக் கிண்டல் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டு, அவர்களைப்போலவே ஒரு போட்டி பக்கத்தை உருவாக்கினர். [நான் பார்த்தபோது ஒன்று இருந்தது. இப்போது எத்தனை குட்டி போட்டிருக்குமோ தெரியவில்லை!]
இவ்வாறு அவர்கள் கேவலமாக நடந்துகொள்ளுமளவிற்கு நாமோ, நமது திரையுலகைச் சேர்ந்தவர்களோ என்ன செய்தோம் எனத் தெரியவில்லை.

             பொதுவாக கர்நாடகாவுக்கும், தமிழகத்துக்கும் பிரச்சனை என்றாலே, அம்மாநிலத்திலிருந்து வந்து, தமிழ்த்திரையுலகில் சாதித்தவர்களைச் சாடும் சில கூட்டம் நம் மாநிலத்தில் உண்டு; குறிப்பாக, ரஜினிகாந்தை! மேலே நான் அளித்துள்ள முகநூல் பக்கத்தில் பார்த்தால், கன்னடத் திரை ரசிகர்கள் அவரையும் நம்மவர்களோடு சேர்த்து ஏளனம் செய்வது புரியும். வந்தாரை வாழவைக்கும் தமிழகம், வாழவைத்தோம் எனத் தம்பட்டம் அடிக்காது; கொடுத்த பலன்களைத் திரும்பத்தரச் சொல்லி சாகடிக்காது.

        இதற்கு முன்னரும் கன்னடர்கள் பிரச்சனை செய்தபோது, அங்கே பிழைப்புக்காக சென்றவர்களை (வயதானவர்கள் என்றும் பாராமல்) அடித்தனர், வாகனங்களை நொறுக்கினர், பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. ஆனால் தமிழகத்தில், அவர்களின் அத்துமீறல்களுக்குக் கண்டனம் தெரிவித்தோம், இங்கு வந்திருந்த கர்நாடகப் பேருந்துகளை சிறிதளவு சேதமின்றிப் பாதுகாத்தோம். இதற்கு, நாம் அவர்களைக் கண்டு அஞ்சியதாகப் பொருள்கொள்ளக் கூடாது. இது நம் ரத்தத்தில் ஊறிய பெருந்தன்மை, கலாச்சாரத்தில் கலந்த சகிப்புத்தன்மை. இதற்கு உதாரணமாக, அப்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு சுற்றுலா வந்திருந்த ஒரு கன்னடக் குடும்பம் விபத்துக்குள்ளாக, அவர்களைக் காப்பாற்றி, மருத்துவ உதவி செய்து, உணவளித்து, போதுமான உதவிகள் செய்து, பாதுகாப்பாக எவ்வித இடையூறுமின்றி அவர்களின் இருப்பிடத்திற்கு அனுப்பி வைத்தோம். நாம் அவர்களுக்கு அளித்த உணவு, நமது விவசாயிகள் உற்பத்தி செய்வதே! இப்போது அவர்கள் கேட்கும் போதுமான தண்ணீர் தர அம்மாநிலத்தவர்களுக்கு வலிக்கிறது. இதற்கு உண்மையான பின்புலம், இதை வைத்து பதவியைத் தக்க வைக்கும் அரசியல் மலப்புழுக்களே.

          இவ்வளவு கொடுமையிலும், நாம் அவர்களுக்குக் காய்கறிகளை ஏற்றுமதி செய்கிறோம்; தமிழகம் இருண்டபோதும், அவர்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்து தருகிறோம். ஏனெனில், நாம் அவர்களை இன்றும் சகோதரத்துவத்தோடு பார்க்கிறோம், அவர்கள் நம்மை மனிதர்களாகக் கூடக் கருதாதபோது! சில பயன்களைக் கருதியே, ஆங்கிலேயரிடமிருந்து விடுதலையடைந்த சுதந்திர இந்தியாவை அப்போதைய இந்திய பிரதமர் திரு.ஜவஹர்லால் நேரு-வின் தலைமையிலான குழு, மொழிவாரி மாநிலங்களாகப் பிரித்தது. தற்போது, அதையே தங்களின் சுயலாபத்திற்காகவும், பதவி ஆசைக்காகவும், மொழியை ஆயுதமாக்கி, அம்மொழி பேசும் மக்களை தற்கொலைப்படையினரைப்போல ஏவி விளையாடுகின்றனர் அரசியல் தீவிரவாதிகள்; மக்கள் என்ற பெயரில் உலவும் மாக்களும், சுயநினைவற்ற 'ஸாம்பி' (Zombie) போல நம்மைத் துரத்துகின்றனர்.

        இனியேனும் மதம், இனம், மொழி, சமயம் கடந்து மனிதனாக நடந்துகொள்ளப் பழகுவோம். நீங்கள் நம்பும் கடவுளோ, மனிதனோ அப்போது உங்களுக்கு துணை நிற்பார் என நம்பலாம். நாம் செய்யும் ஒரு மிகப்பெரிய தவறு, தமிழனின் படம் கர்நாடகாவில் தடை செய்யப்பட்டால், கன்னடனின் படம் தமிழகத்தில் தடை செய்யப்படும் என்று மிரட்டுவது. மேலும், மக்களுக்கு எந்த துன்பம் வந்தாலும் நடிகர்கள் உதவுவார்கள் என எதிர்பார்ப்பது. அவர்கள் "நடிகர்கள்" மட்டுமே; "தலைவர்கள்" அல்ல. இதையெல்லாம் நடிகர்கள் செய்ய வேண்டும் என்கிற எந்த அவசியமும் அவர்களுக்கு இல்லை. இதையெல்லாம் செய்வார்கள் என நம்பி (ஏமாந்து) வாக்களித்தோமே, அந்த அரசியல்வாதிகளேயே நாம் கேட்க வேண்டும். [எங்க...?! காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீங்கடானு  சொன்னா, தலைக்கு நாலாயிரம் வாங்கி ஆர்.கே.நகர "4K-நகர்" ஆக்கிடீங்களே..!] நடிப்பதென்பது அவர்கள் தொழில்; அதில் அவர்கள் செய்யும் சாகசங்களை நம்பி சில்லறையை சிதறவிட்டால், அது உன் தலையில் நீயே அள்ளிப்போட்ட மண். சில நடிகர்கள் மக்கள் துன்பத்தில் பங்குகொண்டு உதவுகிறார்கள் என்றால், அது அவர்களின் மனிதநேயம்; நிச்சயம் அது அவர்கள் கடமை அல்ல..! நமது நடிகர்கள் நமக்கு எதுவும் செய்யவில்லை, நமக்காக குரல் கொடுக்கவில்லை என புலம்புபவர்கள் சம்பந்தப்பட்ட அரசியல் தலைவர்களின் சட்டையை 'தில்' இருந்தால் பிடிக்கவும்.

        அரசியல்வாதிகள் ஆடும் ஆட்டத்தில், நாம் மட்டுமே பலி ஆகிறோம் என்பதை உணர்வோம். அவர்களை கேள்விகேட்கும் அத்தனை உரிமையும் அவர்களை அப்பதவியில் அமர்த்திய நமக்கு உண்டு. [அதுக்கு மொதல்ல நியாயமான வாக்காளரா நடந்திருக்கணும்-ங்கிறதும் முக்கியம்.] நடத்துனர் வரும்வரை அமரும் பேருந்து இருக்கைபோல், தமிழக முதல்வர் இருக்கையில் பலரும் அமர்கின்றனர், அதற்கான சரியான ஆள் வரும்வரை. அமர்ந்த எவரும் இதுவரை தமிழகத்திற்கோ, தமிழக மக்களுக்கோ உருப்படியாக எதுவும் செய்யவில்லை. உலகின் முதல் அணையும் கல்லணையைக்  கட்டியவன் தமிழன் என மார்தட்டும் நாம், அதன்பின் நம்மை ஆண்ட எத்தனை பேர், நீரை சேமிக்க அணை  கட்டினார்கள் எனக் கேட்டால், தலைகுனிய வேண்டியுள்ளது. தண்ணீர் வேண்டி கர்நாடகாவிடம் "பிச்சை" எடுப்பதற்கு பதிலாக, நம்மை இப்போதுவரை நம்பவைத்துக் கழுத்தறுக்கும் அரசியல்வாதிகளைப் "பிச்சு" எடுக்கலாம். "கன்னடர்கள் தமிழர்களைத் தாக்கினர்" என தமிழகத்திலும், "தமிழர்கள் கன்னடர்களைத் தாக்கினர்" என கர்நாடகாவிலும் மாற்றி மாற்றி செய்தி மூலம், இரு மாநில கூரைக்குத் தீயிட்டது, ஒரே சூரிய தொலைக்காட்சிக் குழுமமே! (Sun Network - Sun & Udhaya TV). [அவன் TRP  ஏத்திட்டு, நமக்கு BP ஏத்திட்டான்...!] 

        இத்தனை துரோகங்களைத் தாண்டியும் சகோதரத்துவதோடு எழுந்து நிற்கும் தமிழர்களே, இனி உங்கள் பலத்தைக் கர்நாடகாவிடம் காட்ட நினைத்தால், கர்நாடகாவை மையமாகக் கொண்டு செயல்படும் "கிங்பிஷர் " பியரை அருந்தாதீர்கள்.

        நம்மை ஏமாற்றிய அரசாங்கத்தைப் பழிவாங்க நினைத்தால், இத்தனை நாட்களாக, "மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்குக் கேடு" என அச்சடித்து நம்மிடமே விற்று, நம்மை முட்டாளாக்கி, போதைக்கு அடிமையாக்கி, அவர்கள் மட்டும் பணக்காரராக காரணமான மதுவை அருந்தாதீர்கள். மது அருந்துதல் ஆண்மையின் அடையாளம் என நினைத்தால், அது உங்கள் மடத்தனம். (உண்மையில் அது ஆண்மைக்குறைவிற்கே வழிவகுக்கும்.)

        எத்தனையோ முகேஷ்-கள் திரையரங்கு வாயிலாக தங்கள் வாய்திறந்து காட்டியபோதும் திருந்தாதவர்கள், உங்களின் பழிவாங்கும் எண்ணத்திற்காகவாவது புகையிலையை உபயோகிப்பதைக் கைவிடுங்கள்.

இவற்றைக் கடைப்பிடித்தால் நிச்சயம் நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் நல்லது. 

  1. 'வாட்சப்' முகப்புப்படத்தை பச்சையாக மாற்றுவதை விட, நமது சுற்றுப்புறத்தைப் பசுமையாக மாற்றுவோம்.
  2. பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து, நாம் வாழுமிடங்களைத் தூய்மையாக்கி, மரம் நட்டு பாதுகாத்து வளர்ப்போம்.
  3. சாலைமுழுதும் சிமெண்டால் மூடாமல் மண்தரைக்கு இடம் ஒதுக்கி, மழை நீர் நிலம் புக வழிசெய்வோம்; நிலத்தடி நீரை உயர்த்துவோம்.
  4. காவிரி நீரை அணைகட்டித் தடுப்பவர்கள், தென்மேற்குப் பருவக்காற்றை வேலியிட்டு அடைக்கட்டும். [வேணும்னா சொல்லுங்க... எங்க மாநில அமைச்சருங்க பேருல, வேலி போட தார்ப்பாய் அனுப்புறோம்; ஸ்டிக்கர் ஒட்டி...! நாங்கல்லாம் வைகை அணை தண்ணியவே தெர்மாகோல் போட்டு மறைச்சு, ஒருசொட்டுத் தண்ணி நீராவியாகாம, சூரியனுக்கே தண்ணி காட்டுனவங்க...!! எங்ககிட்டயேவா...?!!!]

        இயற்கை வளங்கள் இப்பூமியில் தோன்றிய அணைத்து உயிர்களுக்கும் பொது. அதைப் பயன்படுத்தலாம்; ஆனால் பங்கிடும் உரிமை யாருக்கும் இல்லை. இவ்வினத்தவன், இம்மொழியினன், இந்நாட்டவன், இம்மதத்தவன் என்பதைத் தாண்டி நாம் இப்பூவுலகினர் என்பதை வேற்றுகிரகவாசிகள் வரும் முன்னரே உணர்வோமாக. அவர்கள் வந்தபின் உணர்வுகொண்டு, ஒன்றிணைந்து போரிட்டு அழியும்முன், ஒற்றுமையாக வாழப்பழகுவோம்.

        அரசியல் சட்டங்கள் நமது வளர்ச்சிக்காக மட்டுமே எழுதப்பட்டவை. அவை நமது இயற்கை சட்டங்களுக்கு எதிராகத் திரும்புமேயானால், "இனி ஓர் விதி செய்வோம்"...!!! ஜல்லிக்கட்டுக்காக நம்மோடு நல்ல உணர்வாளன் போல குரல்கொடுத்தவன் இன்று 7-Up விளம்பரத்தில் அதை வியாபாரப்படுத்துகிறான். நமக்காக போராட்டத்தில் குரல்கொடுத்த காவல்துறை நண்பர், இன்று காவலரிலிருந்து காவலாளியாகப் (Watchman) பணியிறக்கம். கர்நாடகாவில் பாகுபலியை திரையிட விடமாட்டோம் எனப் போர்க்கொடி தூக்கிய கன்னடர்கள், அங்கு முதல் நாளிலேயே 19 கோடி ரூபாய் வசூல் செய்யுமளவிற்கு முண்டியடித்துக்கொண்டு பார்த்திருக்கின்றனர். [டேய்... சாம்பு மவனே...!] நமது நிலைமையை சற்றேனும் எண்ணிப்பாருங்கள்.

        சமீபத்தில் இங்குள்ள ஃபோரம் விஜயா மாலிலுள்ள 'ஸ்பார்' சூப்பர் மார்கெட்டிற்கு சென்றிருந்தபோது கண்ட ஒரு விஷயம். நம்மவர்கள் போராடி கோக், பெப்சியை ஒழிப்போம், இளநீர், பதநீர் பருகுவோம் என பிரசாரம் செய்துகொண்டிருக்கும்போதே, அங்கு ஏற்கனவே இளநீர் பதப்படுத்தப்பட்ட புட்டிகளில் பல்லிளித்துக்கொண்டு நின்றிருந்தன. அதன் பெயரும், விலையும் கீழே. (இதுக்கு குடுக்குற காச, தள்ளுவண்டில இளநீர் விக்கிற அண்ணாச்சிகிட்ட தாராளமா குடுக்கலாம்...!)



        டில்லியில் போராடும் நமது விவசாயிகளை, "அவர்களை பின்னின்று இயக்குபவர்கள் தற்போதைய மத்திய அரசுக்கு எதிரானவர்கள்" என ஒரு சாரார் கூறுகின்றனர். எது எப்படி இருந்தாலும், தண்ணீரின்றியும், விவசாயக் கடன் நெருக்கடியினாலும் இதுநாள்வரை விவசாயிகள் தற்கொலையும், மரணமும் கன்னித்தீவு கதைபோலத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது. [கரண்ட் கூட முழுசா போய்ச்சேராத குக்கிராமங்கள்ள ATM கார்ட வச்சு ஒரு பிரயோஜனமும் கிடையாது. டிஜிட்டல் இந்தியா மொதல்ல பசுமை இந்தியாவாகட்டும்.] காவிரிக்காக மட்டுமே குரல்கொடுக்கும் கண்குறைபாடுடையவர்கள், தாமிரபரணியில் கோக், பெப்சி கம்பெனியினர் ஸ்ட்ரா போட்டு உரிவதைத் தடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். 

முன்பொருமுறை வாட்சப்பில் வந்த விவசாயிகள் பற்றிய காணொளி உங்களுக்காக.



        இதைப்போலவே வாட்சப்பில் வந்த ஒரு உண்மை சம்பவம்/சரித்திரம்

        *முன்பு ஜெர்மனி நாடு பிளவுபட்டிருந்தபோது பெர்லின் நகரத்தை கிழக்காகவும் மேற்காகவும் பெரிய மதில் சுவர் பிரித்தது.

        ஒருநாள் கிழக்கு பெர்லினை சேர்ந்த சிலர், ஒரு லாரி நிறைய குப்பை கூளங்களை கொண்டுவந்து மதில் தாண்டி மேற்கு பெர்லின் பக்கம் கொட்டினார்கள். (அவ்வளவு குரோதம் !)

        மேற்கு பெர்லினை சேர்ந்த மக்களும் அதே மாதிரி செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. மாறாக ஒரு லாரி நிறைய உணவு பொருட்கள், ரொட்டிகள், பால் பொருட்கள் மற்றும் மளிகை சாமான்களை கொண்டுவந்து மதில் தாண்டி இந்த கிழக்கு பெர்லின் பக்கம் அழகாக அடுக்கி வைத்துவிட்டு போனார்கள்.

        மேலும் அதன் மீது இவ்வாறு எழுதி வைத்து விட்டு போனார்கள் :

        "ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதைதான் கொடுப்பார்கள்" (“EACH GIVES WHAT HE HAS")

        எவ்வளவு நிதர்சனமான உண்மை....! உங்களிடம் இருப்பதைதான் உங்களால் கொடுக்க முடியும்.

        உங்களுக்கு 'உள்ளே' என்ன இருக்கிறது ?
        அன்பா - பகையா ?
        அமைதியா - வன்முறையா ?
        வாழ்வா - சாவா ?
      உங்கள் திறமை, பலம் அழிவுப்பாதையை நோக்கியா - வளர்ச்சிப்பாதையை நோக்கியா ?
        இத்தனை காலங்களில் நீங்கள் அடைந்தது என்ன ?*

"ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை
த்தான் கொடுப்பார்கள்"*


        நீ உண்மையான தமிழனாக இருந்தால் இதைச்செய், நீ ஏக் டாடி அண்ட் ஏக் மம்மிக்கு பொறந்திருந்தா அதைச்செய் எனக்கூவும் மானஸ்தர்களே, மேலே குறிப்பிட்ட கருத்துகளைக் குறித்து சற்றேனும் சிந்தித்து, தக்க முடிவெடுப்பீர்களாக...!


சிந்திப்போம், செயல்படுத்துவோம்...!!!
ஜெய் ஹிந்த்...!!!




இன்னும் செ(ா)ல்வேன்,
- யாத்ரீகன்