Sunday 25 September 2016

வழிகாட்டியா? வழிப்பறியா?

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்,

             நான், உங்களைப்போன்றே ஒரு சாமான்யன்! அன்பு, இரக்கம், ஈகை, எதிர்பார்ப்பு, ஆசை, லட்சியம், கோபம், துக்கம், மகிழ்ச்சி, கிண்டல், இன்னபிற உணர்வுகளால் பின்னப்பட்ட ஒரு பூலோகவாசி. வாழ்வெனும் பயணத்தில் நான் காணும் காட்சிகளுள், என்னுள் எதிரொலிக்கும் குரல்களை இத்தளத்தில் பதிவிடுகிறேன். அவைகளை நீங்களும் எங்கேனும் உணர்ந்திருக்கக்கூடும் என்பது எனது நம்பிக்கை. பயணிப்போம் வாருங்கள். (மேலும், இத்தளத்தில் மாதம் ஒரு பதிவை இடலாம் என முயற்சித்துள்ளேன்; இன்னும் உறுதிப்படவில்லை. காரணம், அந்த அளவிற்கு நம்மைச் சுற்றிலும் நடக்கும் விஷயங்களை உள்வாங்கி, அதன் தன்மை மாறாமல் தர இயலுமா என என்னுள் எழுந்த சந்தேகமே! இருப்பினும், உங்கள் மீதான எனது நம்பிக்கையோடு தொடர்கிறேன் யாத்திரையை...!!!)

             நீங்கள் சென்னையில் வசிப்பவரா? இல்லை, என்றேனும் வடபழனியிலிருந்து கோயம்பேடு செல்லும் சாலையில் ஷேர்-ஆட்டோவில் பயணித்துள்ளீர்களா? அப்படியானால் நீங்கள் ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கக்கூடும். அது, "தற்போது புதிதாகக் கட்டியுள்ள மெட்ரோ ரயிலின் வடபழனி நிறுத்தத்திற்கு இட்டுச்செல்லும் படிக்கட்டுகளும், விஜயா - ஃபோரம் மாலுக்கு செல்லும் பாதையும் சந்திக்குமிடத்தில் முகாமிட்டிருக்கும்  போக்குவரத்துக் காவல்துறையினர், ஷேர்-ஆட்டோக்களைத் தடுத்து நிறுத்தி விசாரிப்பது". பெரும்பாலும், ஷேர்-ஆட்டோ ஓட்டுனர்களிடம்  இக்காவல்துறையினர் நடத்தும் விசாரணைகள் அவர்கள் நிறுத்தியிருக்கும் ஆட்டோவிலிருந்து தள்ளியே இருக்கும். சிறிது நேரத்தில், ஓட்டுனர் கையில் சிறு ரிப்பன் அளவிலான ஒரு ரசீதோடு வருவார். சில நேரங்களில் சவாரிக்காக அங்கேயே காத்தும் நிற்பார்; இல்லையேல் சிறு முனகல் போன்ற புலம்பலோடு வண்டியை நகர்த்துவார். இவ்வாறான தருணங்களில் என்னுள் எழுந்த முதல் முக்கிய கேள்வி, "நடந்தது என்ன?"

             அன்றும் அவ்வாறே நான் வழக்கமாக அலுவலகம் சென்றுகொண்டிருக்கும்போதும் நடந்தது. ஓட்டுனரின் அருகில் அப்போது நான் அமர்ந்திருந்தேன். ஓட்டுனரை நெருங்கிய ஒரு போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி, ஓட்டுனரிடம் நிகழ்த்திய உரையாடல் இதோ:

போ.கா.அ.: என்னயா? போட்டுறலாமா?

ஓ: சார்... ரெண்டு நாளுதான் சார் ஆச்சு.

போ.கா.அ.: எங்க? காட்டு?

ஓ: (அந்த ரிப்பன் வடிவ ரசீதை, சில்லறைகளின் நடுவே எடுத்து நீட்டி) இந்தா பாருங்க சார்.

போ.கா.அ.: ஹ்ம்ம்... சரி போ... ரெண்டு நாள் கழிச்சு பாத்துக்கிறேன்.

ஓட்டுனர் மீண்டும் அந்த ரசீதைக் கையில் வாங்கிக்கொண்டு வண்டியை நகர்த்திக்கொண்டே மெல்ல ஒரு வார்த்தையை முணுமுணுத்தார். அது, "பரதேசி!".

             அடுத்த நிறுத்தம் வரை ஆட்டோ சென்றது. அதுநாள்வரை மனதினுள் உறுத்திக்கொண்டிருந்த கேள்விகளை ஓட்டுனரிடம் கேட்டேன்.

நான்: என்னாச்சு அண்ணா? என்ன பில் இது? எதுக்கு இன்னும் ரெண்டு நாள் இருக்கு?

ஓ: லஞ்சம் தல. (என்றார் சற்றே சலிப்படைந்த குரலில்.)

நான்: (எதிர்பார்த்ததுதான்! இருப்பினும்,) அதென்ன கணக்கு, ரெண்டு நாள் கழிச்சு பாத்துகுறேன்னு போறாரு?

ஓ: நாலு நாளைக்கு ஒருதடவ, ஃபைனுங்கற பேர்ல நானூறு ரூபா வாங்குவானுங்க சார். எனக்கு ரெண்டு நாள் முன்னாடிதான் போட்டாங்க சார். அதான் இன்னும் ரெண்டு நாள் கழிச்சு பாத்துக்கிறேன்னு சொல்லிட்டு போறான்.

நான்: அந்த பில்-ல கொஞ்சம் பாக்கலாமா?

ஓ: தாராளமா பாரு சார். என்று நீட்ட, (அதைப் பெற்றுக்கொண்டு அதில் குறிப்பிட்டுள்ளவற்றை வாசித்தேன்.) நான் சென்னை வந்து பத்து வருஷம் ஆச்சு. மூணு வருஷமா இந்த ஷேர்-ஆட்டோ ஓட்டுறேன். போனவருஷம் இப்டி ஆடவ மறிச்சு ஃபைன்-னு சொல்லி காசு கேட்டான் ஒருத்தன். நான் என்ன தப்பு பண்ணேன் சார்? எதுக்கு ஃபைனு? குடிச்சிருக்கேனா? ஒன்-வே-ல வந்தேனா? இல்ல லைசென்சு, ஆர்.சி. புக் இல்லாம வண்டி ஓட்டுறேனா?-னு கேட்டேன் சார். ஓங்கி உட்டான் ஒண்ணு. 'போலீசையே எதிர்த்து பேசுறியா'-னு. ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போனானுங்க. அப்போ புடுங்கி வச்ச லைசன்ச இன்னும் தரல. கலர் ஜெராக்ஸ் எடுத்த காப்பிய வச்சு இன்னும் ஓட்டிகிட்டு இருக்கேன் சார். நான் புள்ள-குட்டிக்காரன் ஒருநாளைக்கு ஐம்பது ரூபாவ இவனுங்களுக்குக் குடுத்து அழுதுட்டு, நான் என்ன பெரிசா சம்பாதிச்சுட முடியும் சொல்லுங்க. (என தன் சோகக்கதையை சொல்லித்தீர்த்தார்.)

நான்: இதப்பத்தி நீங்க போலீஸ் கம்ப்ளைன்ட் குடுக்கவேண்டியதுதானே?

ஓ: ஐயோ சார். அவங்களுக்குலாம் தெரியாமலா சார் இவ்வளவும் நடக்கப்போகுது? வேஸ்டு சார். இதுல நான் ஆட்டோ ஓனருக்கு வேற கலக்ஷன் காசுல இருந்துதான் டியூவுக்கு பணம் குடுக்கணும். பதினஞ்சு, இருபதுனு ஒவ்வொருத்தர்-ட்டயும் நான் உழைச்சு வாங்குன காசு இப்டி அனாமத்தா போகுதேனு ரொம்ப நாள் வருத்தப்பட்டிருகேன் சார். இப்போ அதெல்லாம் பழகிடுச்சு. (சில நேரம் வண்டி அதே நிறுத்தத்தில் சவாரி சேரட்டும் என நின்றுகொண்டிருந்தது. நான் நோட்டமிட்ட ரசீதில், 'நோ-பார்க்கிங் அஃபென்ஸ்' என்று குறிப்பிட்டிருந்ததைக்கண்டேன். 

நான்: எங்கேயாவது நோ பார்க்கிங்-ல வண்டிய நிறுத்துனீங்களா? இதுல அப்டி போட்டுதான் ஃபைன் போட்ருக்காங்க.

ஓ: சத்தியமா சொல்றேன் தல. அதுல என்ன போட்ருகாங்கனு இப்போவரைக்கும் எனக்கு தெரியாது. நான் படிக்கல. ஆனா என் மவன் ஒன்னாங்கிளாசு போறான். நல்லா படிக்கிறான். ஒரு குட்டி பாப்பா இருக்கு. இன்னும் அது வளர்ந்தா இன்னும் செலவு இருக்கும். ஆனா எப்டியும் சமாளிச்சுடுவேன்! (என்று சற்றே முக மலர்ச்சியோடு வண்டியை செலுத்திக்கொண்டிருந்தார்.)

நான்: நான் இத ஒரு போட்டோ எடுத்துக்கவா?

ஓ: தாராளமா எடுத்துக்க தல. இவனுங்க லஞ்சம் வாங்குறது பியூன்-ல இருந்து சி.எம்,. வரைக்கும்கூட தெரியும். அவனுங்க 'என்ன செய்வியோ தெரியாது. எனக்கு ஒரு நாளைக்கு இத்தன கேஸ் வரணும்'-னு சொல்லிருவானுங்க போல. இவனுங்க எங்க தாலிய அறுக்குறானுங்க. இதவச்சு ஏதாச்சும் பண்ணமுடியுமானு பாருங்க. எங்களுக்கு விடிவுகாலம் வருதானு பாப்போம். (என்று அவர் கூறி முடிக்க, நான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்தது; நிறுத்தச்சொல்லி இறங்கினேன்.)

நான்: நான் பாக்குறேன். (என்கிற பொதுவான பதிலோடு, அலுவலகம் நோக்கி நடக்கத் தொடங்கினேன்.)


(போக்குவரத்துக் காவல்துறையினர் அளிக்கும் அபராத (லஞ்ச) ரசீது)

 மனதினுள் எண்ணற்ற கேள்விகள் எதிரொலித்துக் கொண்டிருந்தன. "அடப்பாவிகளா, பிரைவேட் கம்பெனிலதான் டார்கெட் வைக்கிரங்கனு பாத்தா, டிராஃபிக் போலீசுக்குமா? அதுக்காக போற வண்டிய நிறுத்தி நாலு நாளைக்கு ஒரு தடவை 200 ரூபா வாங்குறதுல என்ன நியாயம் இருக்கு? இதுவே ஒரு வி.ஐ.பி. வண்டிய நிறுத்தி வசூல் பண்ணுவாங்களா? சென்னை-ல வெள்ளம் வந்தப்போ எத்தனையோ டிராபிக் போலீஸ், எதப்பத்தியும் கவலைப்படாம உதவுனத நானே கண்ணால பாத்திருக்கேன். அப்டிப்பட்ட நல்லவங்களும் இருக்குற இடத்துல இப்டி சில நச்சுப்பாம்புகளும் இருக்கு." (இதுல நான் கவனிச்ச விஷயம், அப்டி லஞ்சம் கேட்டவரோட பேரு! இந்தியாவின் இரும்பு மனிதரின் பெயரில் பாதி!)

             என்னுடைய அப்பாவும் ஊர்க்காவல் படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவரே. அவருமே எனக்கான பாஸ்போர்ட் வெரிபிகேஷனின்போது, "போலீஸ் உள்ள காசு கேப்பாங்க, இந்த 500 ரூபாய குடுத்திடு", என்றபோது வழக்கம்போல நான் கேட்ட கேள்வி, "எதுக்கு?". வழக்கமான தந்தையாய், "டேய்... சொல்றத செய் டா... இப்டி அங்க போய் எதுவும் கேட்டுத் தொலைக்காத... உன் பேர்ல சின்ன புள்ளி வச்சுட்டன்னா போச்சு... அப்பறம் பாஸ்போர்ட் வராது...!" என்று உள்ளூர நான் எதுவும் கேட்டுவிடுவேனோ என்கிற உதறலோடே என்னை அனுப்பி வைத்தார். ஸ்டேஷனுக்குள் முதல்முறையாக செல்கிறேன். என்முன் இருவர் நான் சென்ற அதே விஷயத்துக்காக வரிசையில் நின்றுகொண்டிருந்தனர். நானும் இறுதியாக அவ்வரிசையில் வால் பிடித்து நின்றேன். என்முறை வந்ததும் என்னை ஏறிடாமலேயே எனது விவரங்களை என்னிடம் கேட்டு சரிபார்த்தார் ஏட்டு ஒருவர். இறுதியாக, "ஃபைவ் ஹண்ட்ரட் குடுங்க" என்றார். நான் "எதுக்கு?" என்றேன். அதுவரை என்னை நிமிர்ந்து பார்க்காதவர் என்னை ஏறிட்டு, உக்காருங்க என்றார். அங்கு பாஸ்போர்ட் விஷயமாக சென்றவர்களில் அமர்ந்த ஒரே ஆள் நான் மட்டுமே. அவரது எதிரில் இருந்த நாற்காலியை இழுத்து அதில் அமர்ந்தேன். "தம்பி, இதுதான் ப்ரோசீஜர்" என்றார். "அதுதான் சார் என்னது-னு கேக்குறேன் நான்" என்றேன். சற்றே என் அருகில் நெருங்கி மெதுவாக, "தம்பி இப்போ நீங்க குடுக்குற காசுல எனக்கு ஒரு பைசா கூட வராது தம்பி. எனக்கு மேல இருக்குறவனுங்களுக்குதான் போகும். தயவு செஞ்சு குடுத்திட்டு கெளம்புங்க...இங்க ரொம்ப நேரம் நிக்காதீங்க" என்றார். வேறு வழியின்றி நானும் ஆட்டுமந்தையாய்க் கொடுத்துவிட்டு நகர்ந்தேன். உள்ளூர அவமானமாக இருந்தது. வீட்டிற்கு வந்து ஒரே சண்டை. அப்போது என் அப்பா எனக்குக் கூறியது, "இங்க எவனும் மனசார அவனுக்கு காசு குடுக்கல. வேற வழியில்லாமதான் குடுக்குறோம். உனக்கு இது புடிக்கலேனா, நீ சின்ன வயசுல சொன்ன மாதிரி கலெக்டர் ஆகி, இதையெல்லாம் நிறுத்து". அறியாத வயதில் நான் கூறிய பணி அது. இப்போது என் குறிக்கோள் விண்வெளி ஆய்வாளன் ஆவதே. "அப்டிலாம் ஒண்ணும் இல்ல. எவனும் 'எதுக்கு காசு கேக்குற?'-னு கேக்கல. அதான் வாங்குறான். ஒருநாள் பாருங்க நான் கேக்குறேன். நாம கேக்க ஆரம்பிச்சா, அவன் வாங்குற தைரியம் வராது".

      நான் கூறியது போலவே ஒரு தருணம் வாய்த்தது. எனக்கு, ஒரு சான்றிதழில் கையொப்பம் வாங்க அப்பாவுடன்  வி.ஏ.ஓ. அலுவலகம் சென்றிருந்த சமயம். தரவுகளை சோதித்துப் பின் கையொப்பமிட்டார் வி.ஏ.ஓ. அப்போது அவரது உதவியாளர், "ஒரு அம்பது ரூபா குடுத்திட்டு போங்க" என்றார். நான் அங்கும், "எதுக்கு?" என்றேன். அப்பா என் கையை அவரது ஒரு கையால் அழுந்தப் பிடித்தவர், மறு கையால் சட்டைப்பையிலிருந்த பணத்தை எடுக்க முற்பட்டார். நான் கேட்ட கேள்வியால் வெலவெலத்த வி.ஏ.ஓ., "அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் சார், அவரு தெரியாம கேட்டுட்டாரு" என்று என் அப்பாவின் கையை பாக்கெட்டில் வைத்தவாறே பிடித்து அவ்வாறு கேட்ட தன உதவியாளரை முறைத்தார். அந்த பார்வை உண்மையில் அவர் கேட்டபோது அவர்மீது வரவில்லை; நான் கேட்டபோது வந்தது. வீடு திரும்பும்போது என் அப்பாவிடம் சற்றே பெருமிதத்தோடு நான் கூறிய வார்த்தைகள், "இதத்தான் செய்ய சொல்றேன்!" அப்பா எதுவும் பேசவில்லை; சிரித்துக்கொண்டார். அன்றிலிருந்து இன்றுவரை எவரேனும் காசு என்று வாய் திறந்தால், "எதற்கு?" என்பது அதன் பதிலாக இருக்கும்; நான் மட்டுமல்ல, என்னைச் சேர்ந்தவர்களுமே...!

      இங்கு உயர்பதவியிலுள்ளவராக இருந்தாலும், தனது கடமை தவறும்போது, தன்னை யாரும் கேள்விகேட்டுவிடுவார்களோ என்கிற உதறலும், பயமும் உள்ளூர இருக்கவே செய்யும். இருப்பினும், தான் ஆட்கொண்டிருக்கும் பதவி, தன்னை யாரும் கேள்விகேட்க மாட்டார்கள் என்கிற மாயையை அவர்கள்முன் கவசத்திரையிடும். அதுவே மற்றவர்கள் கேள்வியேதுமின்றி லஞ்சம் தரும்போதும், தர முன்வரும்போதும், மேலும் வளர்ச்சிபெறும். நாளடைவில் நாட்டின் ஆரோக்கியத்தில் புற்றுநோயை படரவிடும். இங்கு நமது துன்பத்தின் காரணம் நாமேதான். இதைத்தடுக்க ஒரே வழி, "கேள்வி கேளுங்கள்". நீங்கள் "ஏன்? எதற்கு?" என்று கேட்கும் கேள்விகள் நிச்சயம் லஞ்சம் கேட்பவரை நிலைகுலையச் செய்யும். கடமையை மீற லஞ்சம் வாங்கும் ஊழியரை விட, கடமையைச் செய்ய லஞ்சம் வாங்கும் ஊழியரே இங்கு அதிகம். எத்தனை இடர் வந்தாலும் நேர்வழியில் செல்ல முயலுங்கள். உங்கள் குறுக்குவழி, நாளைய தலைமுறையின் கழுத்தை நெரிக்கும் என்பதை உணருங்கள்.

உணர்வோம், உணர்த்துவோம்...!
ஜெய் ஹிந்த்...!!!


(ஒருமுறை எனது பணப்பையைத் தவறவிட்டபோது, சற்றும் முகம் மாறாமல் "பரவாயில்ல தம்பி. பாத்து போங்க" என முகமலர்ச்சியோடு, தனது ஒரு வாடிக்கையாளரின் வருமானத்தை விட்டுக்கொடுத்த ஷேர்-ஆட்டோ ஓட்டுநருக்கும், என்னை இப்படி ஒரு கட்டுரையை எழுதத் துணிவு தந்த ஓட்டுநருக்கும், இப்பதிவு சமர்ப்பணம்.)



இன்னும் செ(ா)ல்வேன்,
- யாத்ரீகன்